திருகோணமலை மாவட்டத்தின் நகரத்தின் மத்திய பகுதிக்குள் நுழைகின்ற வாயிலில் முப்புரமும் கடலால் சூழப்பட்டு இயற்கைஎழில் கொஞ்சும் வனப்போடு உயர்ந்து நிற்கும் உவர்மலை மண்ணிலே நிமிர்ந்த நடையோடும் நெஞ்சுறுதியோடும் வீறுநடை போட்ட சுவாமி விவேகானந்தரைப் போன்று நிமிர்ந்து நேர் கொண்ட பார்வையோடும் கண்ணகி அம்பாளின் அருளோடும் எங்கள் உவர்மலை விவேகானந்தா கல்லூரி கல்வி, ஒழுக்கம், தூய்மை என்ற மகுடவாசகத்தை நோக்காகக் கொண்டு இன்று தலை நிமிர்ந்து நடைபோடுகின்றது.
எமது கல்லூரியின் ஸ்தாபகர்; அமரர் திரு.வி.வேலுப்பிள்ளை அவர்கள் உவர்மலை வாழ்மக்களின் பிள்ளைச் செல்வங்களுடைய எதிர்காலம் உன்னதமாக அமைய வேண்டும் எனும் இலட்சிய நோக்கோடும் உயரிய சிந்தனையோடும் அடர்ந்த காடாகக் கிடந்த நிலத்தை உவர்மலை மக்களின் பேராதாரவுடன் செப்பனிட்டு தமது அயராத முயற்சியினாலும் கடின உழைப்பினாலும் 70' x 20' கட்டிடத்தை கட்டி தென்னங் கிடுகினால் கூரையிட்டு அறிவொளியைப் புகட்டும் ஆலயமாக உவர்மலை தமிழ் வித்தியாலயம் எனும் நாமம் சூட்டி 1978ம் வருடம் மாசித் திங்கள் 10ம் திகதி 97 மாணவர்களுடனும் 04 ஆசிரியர்களுடனும் திரு.ஏ.தங்கவேல் அவர்களை முதலாவது அதிபராகக் கொண்டு இன்றைய பாராளுமன்ற கௌரவ எதிர்க்கட்சித் தலைவர்.இரா.சம்பந்தன் பாராளுமன்ற உறுப்பினராக இருந்த போது அவர்களால் சம்பிரதாய பூர்வமாக ஆரம்பித்து வைக்கப்பட்டு திரு.வி.வேலுப்பிள்ளை அவர்களினால் அரசாங்கத்திடம்; கையளிக்கப்பட்டது. இக்கல்லூரியின் உருவாக்கத்திற்கு கல்லூரி ஸ்தாபகர், உவர்மலை மக்கள், கிராம அபிவிருத்திச் சங்கம், அதிபர்.ஏ.தங்கவேல், உதவி அரசாங்க அதிபர் ஸ்ரீ.வே.சாம்பசிவ ஐயர் போன்றோரும் இவர்ளோடு ஒன்றிணைந்து இன்னும் பல நலன் விரும்பிகளும் உழைத்த உழைப்பு காரணமாயிற்றென எமது கல்லூரியின் பல இதழ்களிலும் பதிவிலிடப்பட்டு நினைவு கூரப்படுகின்றது.
பாடசாலையில் தொடக்க காலத்தை அடுத்து வந்த நான்கு ஆண்டுகளில் மாணவர் தொகை 400 ஆகவும், ஆசிரியர் தொகை 14 ஆகவும் அதிகரித்தது. திரு.கு.பாலச்சந்திர ஐயர் அவர்கள் அதிபராக கடமையேற்று 1984ம் ஆண்டு எமது பாடசாலை தரம் II பாடசாலையாக தரம் உயர்த்தப்பட்டு க.பொ.த (சா/தர) வகுப்புக்கள் ஆரம்பிக்கப்பட்டன. 1991ம் ஆண்டு திரு.ஆ.மகாதேவன் அவர்கள் அதிபராக இருந்த காலத்தில் உயர்தர கலைப்பிரிவு ஆரம்பிக்கப்பட்டது. இதனடிப்படையில் எமது பாடசாலை 1C பாடசாலையாக தரம் உயர்த்தப்பட்டு உவர்மலை விவேகானந்தா மகா வித்தியாலயம் என நாமம் சூட்டப்பட்டது.
1992ம் வருடம் திரு.சி.நவரத்தினம் அவர்கள் அதிபராகப் பதவியேற்ற பின்பு பாடசாலை ஆரம்பித்து 14 வருடங்களின் பின் முதன் முதல் பரிசளிப்பு விழாவென்றும், கலாசார மண்டபத்தில் நடாத்தப்பட்டது. இதன் போது முதல் சஞ்சிகையான மலையருவி வெளியிடப்பட்டது. மேலும் 1994ம் வருடம் கணித, விஞ்ஞானப் பிரிவு ஆரம்பிக்கப்பட்டு 1AB பாடசாலையாகத் தரம் உயர்த்தப்பட்டதுடன் உவர்மலை விவேகானந்தா கல்லூரி எனவும் பெயர் மாற்றம் பெற்று இன்று வரை தலை நிமிர்ந்து வீறுநடை போடுகின்றது. 2001 ஆம் வருடம் எமது கல்லூரி மாணவர்களில் தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சையில் 50 வீதமானோர் ( 57 பேர் ) வெட்டுப்புள்ளிக்கு மேல் பெற்று சித்தியடைந்தமை வரலாற்றுச் சாதனையாகும். எமது கல்லூரியின் பௌதீக வளர்ச்சிப்படியில் முக்கிய சாதனையாகத் திகழ்ந்து வானளாவ உயர்ந்து நிற்பது விவேகானந்தா கலையரங்கமாகும். இக்கலையரங்கத்தை எப்படியும் கட்டி முடித்து விட வேண்டும் என்ற உறுதியோடு நின்று உழைத்தவர் அதிபர். திரு.சி.நவரத்தினம் அவர்கள். அவரது அயராத உழைப்பும் காலஞ் சென்ற பாராளுமன்ற உறுப்பினர் திரு.அ.தங்கத்துரை அவர்களின் உதவியினாலும் காலத்திற்குக் காலம் சேவையிலிருந்த கல்விச் செயலாளர்களின் உதவியுடனும் வடக்கு கிழக்கின் அன்றைய ஆளுனர் காமினி பொன்சேகா அவர்களால் அடிக்கல் நாட்டப்பட்டு 2006 இல் திறந்து வைக்கப்பட்டது. இதே அதிபரின் காலத்தில் மாணவர்களின் முக்கிய தேவையாக இருந்த மாணவர் விடுதிக்கும் அடிக்கல் நாட்டப்பட்டு திரு.யு.செல்வநாயகம் அதிபர் அவர்களின் காலத்தில் 2010 இல் திறந்து வைக்கப்பட்டது. இவ்வாறு துரித வளர்ச்சி கண்ட இக்கல்லூரிக்கு உறுதுணையாக பணியாற்றிய அதிபர்களின் வரிசையில் திரு.எஸ் நவரத்தினம் அதிபர் அவர்கள் இக்கல்லூரியில் சுமார் 16 வருடங்கள் ( 1992 – 2008 ) மகத்தான சேவையாற்றி ஓய்வுபெற்றார். இவரது சேவைக்காலம் கல்லூரியின் வரலாற்றில் மிகவும் உன்னதமானது என கல்லூரி சார்ந்த சமூகம் இன்றும் நினைவுகூருவது குறிப்பிடத்தக்கது.
திரு.சி.நவரத்தினம் அதிபர் அவர்களைத் தொடர்ந்து தற்போது திருகோணமலை கல்வி வலயத்தின் வலயக்கல்விப் பணிப்பாளராகச் சேவையாற்றும் திரு.N.விஜேந்திரன் அவர்களும், ஓய்வு பெற்ற கல்விப் பணிப்பாளர் திரு.யு.செல்வநாயகம் அவர்களும், திருகோணமலை குச்சவெளிக் கோட்டத்தில் கடமையாற்றும் கோட்டக்கல்வி அதிகாரி திரு.எஸ்.மதியழகன் அவர்களும் அதிபர் திரு.எஸ்.ஆனந்தசிவம் அவர்களும் தொடர்ந்து திரு.வே.தவராஜா அவர்களும் தத்தமது காலப்பகுதிக்குள் சிறந்த முகாமைத்துவத்தின் மூலம் எங்கள் கல்லூரியை சிறப்பாக வழிநடத்திச் சென்றனர். திரு.எஸ்.ஆனந்தசிவம் அதிபர் அவர்களின் காலத்தில் தொழில்நுட்ப பாடத்துறையும் (2017) ஆரம்பிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. இவர்களுக்குப் பக்கபலமாக பிரதி அதிபர்களும் முகாமைத்துவக் குழுவினரும், அர்ப்பணிப்புடனான ஆசிரியர் குழாமும், பாடசாலை அபிவிருத்திக் குழு மற்றும் பழைய மாணவர் சங்கத்தினரும், ஏனைய நலன் விரும்பிகளும் கொடுத்த பேராதரவு மிகமுக்கியமானதாகும். இவர்களைத் தொடர்ந்து இக்கல்லூரியை மேலும் வளர்ச்சிப் பாதைக்கு இட்டுச் செல்ல திரு.க.ரவிதாஸ் அவர்களும் 2017.10.23 இல்; கடமையேற்று தனது சிறந்த முகாமைத்துவத்தின் கீழ் இக்கல்லூரியை சிறப்பாக வழிநடத்திச் செல்கின்றார். இவருக்கு, பாடசாலை அபிவிருத்திக்குழுவும், அதன் செயலாளர் திரு.வே.புஸ்பாகரனும், மற்றும் பழைய மாணவர் சங்கமும், அதன் செயலாளர் திருமதி.ஆ.கிரு~hந்தி அவர்களும் உறுதுணையாகவுள்ளனர்.
இக்கால கட்டங்களில் எமது கல்லூரி மாணவர்கள் கலை, வர்த்தக, கணித விஞ்ஞானத் துறைகளிலும் மற்றும் இணைப்பாடவிதானங்களில் குறிப்பாக தமிழ்த்திறன் போட்டிகள், சமூக விஞ்ஞானப் போட்டிகள், தகவல் தொழில்நுட்பத் திறன் சார்ந்த போட்டிகள், அழகியல் துறைகளிலும்;, விளையாட்டுத் துறைகளிலும் பல தேசிய சாதனைகளை நிலைநாட்டியிருக்கின்றார்கள். மேலும் உயர் பதவி நிலைகளிலும், உயர் பட்டங்களைப் பெற்றவர்களாகவும் நூற்றுக்கணக்கான மாணவர்கள் திகழ்கின்றார்கள். குறுகிய காலத்தில் பெரு வளர்ச்சி பெற்ற எமது கல்லூரியின் மகத்தான சாதனைகளை வெளிப்படுத்த இச்சிறு பதிவு போதாது. மேலும் எமது கல்லூரி உயர்ந்து மாண்புமிகு மாணவர்களை உருவாக்கி நாட்டிற்கு சிறந்த நற்பிரஜைகளை வழங்க கல்வி, ஒழுக்கம், தூய்மை என்ற மகுட வாசகத்திற்கு இணங்கவும் எமது நோக்கக் கூற்று, பணிக்கூற்று என்பவற்றிற்கு அமைவாகவும் செயற்பட்டு எமது கல்லூரி செயற்பட்டு வருகின்றது.
உவர்மலை விவேகானந்தாவின் சிறப்புக் காணொளி